சீரடி சாய்பாபாவின் 106-வது சமாதி தினத்தை முன்னிட்டு, அக்கரைப்பட்டி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள அக்கரைப்பட்டியில் அமைந்துள்ள தென் சீரடி சாய்பாபா கோயில், சுமார் 35,000 சதுர அடிப் பரப்பளவில் அமைந்து, தென் இந்தியாவில் உள்ள பெரிய சாய்பாபா கோயில்களில் ஒன்றாகும். இந்த கோயிலின் கும்பாபிஷேகம் 2020-ஆம் ஆண்டு சிறப்பாக நடைபெற்றது, இதில் ஆன்மீக தலைவர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். சமயபுரம் சுங்கச்சாவடி அருகே, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 5 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கோயிலை, கம்பம் அறக்கட்டளை தலைவர் கே. சந்திரமோகன் தலைமையில் நிர்வாக அறக்காவலர்கள் உருவாக்கியுள்ளனர்.
சீரடி சாய்பாபா விஜயதசமி நாளில் மகா சமாதி அடைந்தார், அதனை நினைவுகூரும் விதமாக, அவரது 106-வது மகா சமாதி தினத்தன்று, கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அதோடு, பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகத்தின் சார்பில் மகா அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னணி பாடகர் வேல்முருகன் தலைமையில் சாய்பாபாவை போற்றும் பக்திப் பாடல்கள் மேளதாளங்களுடன் பாடப்பட்டன, இதனால் பக்தர்கள் ஆனந்தமாக நடனமாடி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
பாடகர் வேல்முருகன், “தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சாய்பாபா கோயில்கள் உள்ளன, ஆனால் பக்தர்கள் சீரடி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய விரும்புகிறார்கள். இந்த கோயில் வழியாக, இங்கு வருகை தரும் பக்தர்கள் உடனடியாக சாய்பாபாவை தரிசிக்க முடியும். சாய்பாபாவை தரிசித்த பின்பு என் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. எனவே, பாபாவைப் போற்றும் பாடல்களை நான் எழுதி, பாட திட்டமிட்டுள்ளேன்,” என்றார்.