கோவை சிங்காநல்லூர் அருகே மழை பாதித்த பகுதிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். கடந்த சில நாட்களாக கோவையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் மழைநீர் சூழ்ந்து, கால்வாய்கள் நிரம்பியதால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளை சரிசெய்ய, கோவை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இந்த சூழலில், மின்சார துறை மற்றும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில் பாலாஜி, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிங்காநல்லூர் அருகே கதிரவன் கார்டன் பகுதியில் வாய்க்காலில் தேங்கி இருந்த குப்பைகளை அகற்றும் பணிகளை அவர் பார்வையிட்டார். அப்பகுதி மக்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்யுமாறு கோரியதையடுத்து, அவர் அவர்களது பகுதிக்கு சென்று நிலைமையை ஆராய்ந்தார்.
அப்பகுதி மக்கள் சாலைகள் அமைத்து தரவேண்டும், வாய்க்கால்களை சரியாக பராமரித்து குடியிருப்பு பகுதிகளில் நீர் புகாத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கோரினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, அமைச்சர் உடனடியாக அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆய்வின்போது, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவ குரு பிரபாகரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.