தமிழக அரசு, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கலாமா என்பதை குறித்து பொதுமக்களிடத்தில் கருத்துக்களை கேட்டு வருகிறது. இது, கோவை, திருப்பூர் மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள தென்னை விவசாயிகளின் கோரிக்கைக்கு பின்னர் எடுத்த நடவடிக்கையாகும். இந்த விவசாயிகள், தேங்காய் மற்றும் கொப்பறை தேங்காய்க்கு நியாயமான விலை கிடைப்பதில்லை என்று ஆவேசப்பட்டு, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்யுமாறு மாநில அரசை கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து, அரசு, அட்டைதாரர்களின் கருத்துக்களை அறிய ரேஷன் கடை மேற்பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தி, அதற்கான படிவங்களையும் வழங்கியுள்ளது. இதன்மூலம், இந்த மாத இறுதிக்குள் பொது மக்களின் விருப்பங்களை கேட்டறிந்து, அந்த விவரங்களை மாவட்ட நிர்வாகங்கள் அறிக்கையாக அரசுக்கு அனுப்ப உள்ளன.
முதல் கட்டமாக, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, கோவை, மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சிலர் தேங்காய் எண்ணெயை சமையலுக்கு அதிகம் பயன்படுத்துவதால், 1 லிட்டர் பாமாயில் எண்ணைக்கு பதிலாக 1 லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்து ஆர்வமுள்ள கார்டுதாரர்களை கண்டறிய கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவில் சப்ளை அதிகாரி கூறுகையில், இந்த கணக்கெடுப்பு கேரள மாநில எல்லையோர மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்காக நடத்தப்படுவதாகவும், இறுதியாக இந்த முடிவை அரசு எடுக்கும் என்றும், கலெக்டர்களின் ஆய்வறிக்கைகள் கிடைத்த பிறகு அரசு இறுதி முடிவை அறிவிக்கும் என்றும் தெரிவித்தார்.
Leave a Reply