வரவிருக்கும் தீபாவளி பண்டிகை நாளில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படாது என உறுதி செய்வதற்காக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்போது, அதிக கட்டணம் வசூலிக்கமாட்டோம் என உரிமையாளர்கள் உறுதி அளித்தனர். இதை அமல்படுத்தும் வகையில் ஆன்லைன் முன்பதிவு செயலிகளுக்கும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
ஆனாலும், தீபாவளி முன்னிட்டு, சில பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும், வெளிமாநில பேருந்துகள் தமிழ்நாட்டில் செலுத்த வேண்டிய வரி செலுத்தாமல் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் வரி செலுத்தாத பேருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்துகளைத் தடுத்துவைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.
பயணிகள் தாங்கள் பயணிக்கவிருக்கும் பேருந்தின் உரிமம், வரி, மற்றும் தகுதிச்சான்றுகள் இருப்பதை சரிபார்த்து பயணிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சில பேருந்துகள் இறுதிச் செலுத்தும் கட்டணத்தை முழுமையாகவே பயணத்தில் உள்ள அனைத்து இடங்களுக்கும் வசூலிப்பதாகவும், குறிப்பாக, சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.1,400 கட்டணத்தை மதுரைக்கு செல்வதற்கும் அதே அளவில் வசூலிப்பதாகவும் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த புகார்களை உணர்ந்து, உடனடி நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தேவையான முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.