ஆடி மாதம் இன்று தொடங்கியுள்ள நிலையில் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு விரதமிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக அம்மனை தரிசிக்க செல்வது வழக்கம்.
அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம், வளம்பக்குடியில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு 25-க்கும் மேற்பட்டோர் இன்று (புதன்கிழமை) காலை பாதயாத்திரையாக நடந்து சென்ற பக்தர்கள் மீது சரக்கு லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை, கண்ணுக்குடி பட்டியையைச் சேர்ந்தவர்கள் இன்று அதிகாலை திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக, தஞ்சாவூர் மாவட்டம், வளம்பக்குடி, திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சரக்கு ஏற்றிக் கொண்டு வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது மோதியது. இதில், அதே ஊரைச் சேர்ந்த சின்னையன் மகன் முத்துசாமி, கார்த்திக் மனைவி மீனா, முருகன் மனைவி ராணி, ரமேஷ் மனைவி மோகனாம்பாள் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சங்கீதா, லட்சுமி ஆகிய 2 பேரை சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சங்கீதா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.இதனால் இந்த விபத்தில் ஐந்து பேர் பலியாகினர். இந்த சம்பவம் தஞ்சை மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து செங்கிப்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.