கோவை: உலக ஆஸ்டியோபோரோசில் தினம் மற்றும் உலக மூட்டுவலி தினத்தை முன்னிட்டு, எலும்பு ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு வாக்கத்தான் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு வாக்கத்தானை கோவை வடக்கு காவல்துறை ஆணையர் ஸ்டாலின் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பிரகதி மருத்துவமனையில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் குழந்தைகள், கையில் பதாகைகளை ஏந்தி, எலும்பு மற்றும் மூட்டு பிரச்சனைகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
வாக்கத்தான் ரேஸ்கோர்ஸ் மீடியா டவரில் தொடங்கி, ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சுற்றி நடைபயிற்சியாக முன்னெடுக்கப்பட்டது.
மருத்துவர் பாலசுப்பிரமணியன் வாக்கத்தான் நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். “தற்போதைய காலகட்டத்தில் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகமாக உள்ளன. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஊட்டச்சத்து நிறைந்த பால் மற்றும் கீரைகள் போன்ற உணவுகளை உட்கொண்டால், எலும்பு பிரச்சனைகளை தவிர்க்கலாம். மேலும், வெயிலில் பெரியவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதாலும், சிறுவர்கள் விளையாடுவதாலும், விட்டமின்-டி கிடைப்பதன் மூலம் எலும்பு பிரச்சனைகளை தவிர்க்க முடியும்” என அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வின் மூலம், கோவை மக்களிடம் எலும்பு ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு மிகுந்த அளவில் ஏற்படுத்தப்பட்டது.