சென்னையில் உள்ள 1,002 இடங்களில் உள்ள 7,166 பொது கழிப்பறைகள் தனியார்மயமாக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு மார்க்கெட், பெசன்ட் நகர் கடற்கரை, கிண்டி ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக மொத்தம் ரூ. 1,167 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ராயபுரம் மற்றும் திருவிக நகரில் உள்ள 3,000க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் ரூ. 430 கோடியில் தனியார்மயமாக்கப்பட்டன. இவை வருகிற நவம்பர் மாதத்தில் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இதனைத் தொடர்ந்து, சென்னை முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய திட்டம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும். 1-4 மண்டலங்களுக்கு ரூ. 350 கோடி, 7-10 மண்டலங்களுக்கு ரூ. 443 கோடி, 11-15 மண்டலங்களுக்கு ரூ. 373 கோடி ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டமும் 9 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் தனியார்மயமாக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள் பொது கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருத்தல், சிசிடிவி கேமரா கண்காணிப்பு, தண்ணீர் விநியோகம், பணியாளர்கள் நியமனம் போன்ற பணிகளை மேற்கொள்கின்றன. இடித்து மீண்டும் கட்டப்பட வேண்டிய கழிப்பறைகள் ரூ. 150 கோடி செலவில் புதிதாகக் கட்டப்படும், மேலும் முதல் ஆண்டு பராமரிப்புக்காக ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்கான டெண்டர் வருகிற அக்டோபர் 16ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கிடையில், சென்னை கவுன்சிலர்கள் பலர் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “கழிப்பறைகளை சரியாக நிர்வகிக்க தவறினால், ஒப்பந்ததாரர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?” என்ற கேள்வியை அவர்கள் எழுப்பியுள்ளனர். மேலும், “கழிப்பறைகளை 3 மாதங்களில் கட்ட முடிந்தால், ஏன் மாநகராட்சி ஒரு ஆண்டு கால அவகாசம் வழங்குகிறது?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு மாநகராட்சி, “போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது, 3 மாதங்களுக்குள் புதிய கழிப்பறைகள் கட்டப்படும்” என அறிவித்துள்ளது.
Leave a Reply