‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகபடுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் …..

pti11 08 2022 000153a - 'முதல்வர் மருந்தகம்' என்ற புதிய திட்டத்தை அறிமுகபடுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .....

சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றினார். பின்னர் உரையாற்றிய அவர், “நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த விடுதலை நாள் வாழ்த்துகள். விடுதலையை காப்பாற்றிய தியாகிகளை போற்றுவோம். சுதந்திரத்துக்காக போராடியவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற உறுதி செய்கிறோம். 300 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த சுதந்திரம் இது.

ரத்தத்தையே கொடையாக தந்து பெற்ற இந்திய சுதந்திரத்தை, 50 ஆண்டுகளுக்கு முன் மாநில முதலமைச்சர்களுக்குப் கொடியேற்ற உரிமை வழங்கியவர் கலைஞர். 4வது ஆண்டாக தேசிய கொடி ஏற்றுவதில் பெருமை அடைகிறேன். நமது பன்முகத்தன்மையின் அடையாளம் தேசிய மூவர்ணக் கொடியே. விடுதலை போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. திராவிட மாடல் அரசு, எந்த மாநிலமும் செய்யாத வகையில் அனைத்து தியாகிகளையும் போற்றுகிறது. சமூகநீதி, சமத்துவம், மொழிப்பற்று ஆகிய அடித்தளத்தில் செயல்படும் இயக்கம்தான் திமுக.

வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியோடு சமூக வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும். நேதாஜியின் இந்திய விடுதலை படையில் கரம் கோர்த்தவர்களில் தமிழர்கள் துவக்கமாக இருந்தனர். கோவையில் வ.உ.சி.க்கு சிலை, கடலூரில் அஞ்சலை அம்மாளுக்கும், நாமக்கல்லில் கவிஞர் ராமலிங்கத்துக்கும் சிலை அமைக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசின் திட்டங்களால் உயர்கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. கடந்த 3 ஆண்டுகளில், தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்துள்ளது. சமூகத்துக்காகவும் குடும்பத்துக்காகவும் வாழ்நாள் முழுவதும் உழைக்கும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குகிறோம்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த 3 ஆண்டுகளில் 65,000 இளைஞர்களுக்கு அரசு பணி கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் தொழில்துறையில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறோம்; 2026-ம் ஆண்டு ஜனவரிக்குள் 75,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும். கட்டபொம்மன், மருது சகோதரர்கள், ராமநாதபுரம் மன்னர் விஜயரகுநாத சேதுபதி, வ.உ.சி. வழித்தோன்றல்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளதாக அறிவித்தார். முதல்வர் மருந்தகம் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 1,000 மருந்தகங்கள் திறக்கப்படும்; பொங்கல் திருநாளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படும். முன்னாள் ராணுவ வீரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விடுதலை போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.20,000-ல் இருந்து ரூ.21,000-ஆக உயர்த்தப்படுகிறது. இவர்களின் குடும்ப ஓய்வூதியம் ரூ.11,000-ல் இருந்து ரூ.11,500-ஆக உயர்த்தப்படுகிறது என்றார்.”

இதையும் படிக்க  விரிவடையும் சென்னை மாநகராட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *