தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக் குழுவின் அவசர பொதுக்குழு கூட்டம் கடந்த 29.6.2024 அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. அதில் புதிதாக வடமொழி தலைப்புடன் சட்டமாக்கப்பட்டுள்ள பிஎன்எஸ், பிஎன்எஸ்எஸ், பிஎஸ் ஆகிய சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறுதல் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என கடந்த 1 ஆம் தேதி முதல் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியிலிருந்து விலகி இருந்தனர். இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாளை திங்கட்கிழமை திருச்சியில் மாபெரும் பேரணி நடைபெறுகிறது.
இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் பேசுகையில்….மாநிலம் முழுவதும் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொள்ளும் பேரணி திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலையில் இருந்து உழவர் சந்தை மைதானம் வரை நாளை நடைபெற உள்ளது. பேரணி முடிவில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் 3 புதிய சட்டத்திருத்தம் தொடர்பாக விவாதம் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கான போராட்டம் குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தண்டனை சரத்துகள் அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்கது. அதேசமயம் காவல்துறைக்கு சில சரத்துகள் அதிக வரம்பு உள்ளது. மீண்டும் பாராளுமன்றத்தில் இந்த 3 புதிய சட்டங்களை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு இதில் உள்ள குறைகளை களைய வேண்டும் என தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது செயலாளர் சுகுமார், செயற்குழு உறுப்பினர் சுதர்சன், முத்துமணி, ஜாக் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.
Leave a Reply