தேனி மாவட்டத்தில் கஞ்சா போதைப் பொருளின் புழக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.மேலும் தமிழக கேரள எல்லையை ஒட்டிய மாவட்டமாக இருப்பதால் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டு தேனி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு கடத்தப்படுகிறது.மேலும் கம்பம்,வருசநாடு உள்ளிட்ட பகுதிகள் கஞ்சா விற்பனை மையங்களாகவே செயல்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ஏற்கனவே பல்வேறு கஞ்சா வழக்குகளில் சிக்கிய வருசநாடு அருகே உள்ள குமணன் தொழுவைச் சேர்ந்த சத்யராஜ் என்பவரின் செல்போன் எண்ணை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்ததில்,ஆந்திராவில் இருந்து வருசநாடு பகுதிக்கு கஞ்சா கடத்தி வரப்படும் தகவல் கிடைத்தது.இதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டியில் இருந்து வருசநாடு செல்லும் வழியில் உள்ள தேவராஜ் நகர் என்னும் பகுதியில் கடமலைக்குண்டு போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த வாகனத்தை ஜிபிஎஸ் சிக்னல் மூலம் கண்டறிந்து தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில்,அந்த வாகனத்தில் சத்யராஜ், மாயன்,மற்றும் வனராஜா ஆகிய மூன்று பேர் இருந்ததும் அவர்களிடம் தலா 4.20 கிலோ,மற்றும் 4.500 கிலோ பண்டல்கள் என 3 சாக்கு பைகளில் மொத்தம் 22 கிலோ கஞ்சா இருப்பதும் கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கஞ்சாவை கடத்தி வந்த உசிலம்பட்டி அருகே உள்ள பேச்சியம்மன் கோவில்பட்டியைச் சேர்ந்த மாயன் (54), வருசநாடு அருகே உள்ள குமணன் தொழுவைச் சேர்ந்த சத்யராஜ் (33), மற்றும் முருகன்,உசிலம்பட்டி அருகே உள்ள கீரிப்பட்டியைச் சேர்ந்த வனராஜா (46),மற்றும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ரமணா ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்த கடமலைக்குண்டு போலீசார்,கஞ்சா கடத்தி வந்து பிடிபட்ட மாயன் சத்யராஜ் மற்றும் வனராஜா ஆகிய மூன்று பேரை கைது செய்து அவர்கள் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.