இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட போர் பதற்றத்தால், இந்தியா இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ் நகருக்கான அனைத்து விமான சேவைகளையும் வெள்ளிக்கிழமை முதல் உடனடியாக நிறுத்துவதாக ஏா் இந்தியா அறிவித்துள்ளது.
ஈரானில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்குப் பிறகு, ஈரான் இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி அளிக்கப்படும் என அறிவித்தது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் உருவாகியுள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக செயல்படும் சில மத பயங்கரவாதக் குழுக்கள், அந்நாட்டு விமானங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த வாய்ப்பு இருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏா் இந்தியா தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், “மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, டெல் அவிவ் நகருக்கான விமான சேவை உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. மறு அறிவிப்பு வரும் வரை சேவை நிறுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணம் திரும்ப அளிக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.
2023 அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா இஸ்ரேலுக்கான விமான சேவையை நிறுத்தியிருந்தது. மார்ச் 3-ஆம் தேதி சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. தற்போது, மீண்டும் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.