ஈராக் நாடாளுமன்றம், பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை 9 ஆக குறைப்பதற்கான மசோதாவை அறிவித்துள்ளது, இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய ஈராக் தனிநபர் சட்டத்தின்படி, பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதியமைச்சகம் இந்த சட்டத்தை மாற்றுவதற்காக புதிய மசோதாவை முன்மொழிந்துள்ளது. இந்த மசோதா 9 வயது சிறுமிகளுக்கும் 15 வயதான ஆண் குழந்தைகளுக்கும் திருமணத்தை அனுமதிக்கிறது.
இஸ்லாமிய மதச்சட்டத்தை நிலைப்படுத்தவும், தகாத உறவுகளிலிருந்து இளம் பெண்களை பாதுகாக்கவும் திருமண வயது குறித்த புதிய மசோதா முயல்வதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த மசோதா குழந்தை திருமணத்தை ஊக்குவிக்கும் என்ற ஐயம் எழுந்துள்ளது. இது, குடும்ப விவகாரங்களில் நீதிமன்றத்தின் அதிகாரத்தை குறைத்து, மதகுருமார்களின் செல்வாக்கை அதிகரிக்கும் என்பதால், பெண்களின் சொத்துரிமை, வாரிசுரிமை, மற்றும் விவாகரத்து கோரும் உரிமை உள்ளிட்ட பல உரிமைகள் பறிக்கப்படும் என்று ஈராக் பெண்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
குழந்தை திருமணத்தின் விளைவாக கல்வி இடைநிற்றல் அதிகரிக்கும் அபாயம், இளவயதில் கர்ப்பம் தரித்தல், மற்றும் குடும்ப வன்முறை அதிகரிக்கும் ஆபத்து போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என்றும் பெண்கள் எச்சரித்துள்ளனர்.
Leave a Reply