பொள்ளாச்சி பாலக்காடு சாலை உடுமலை சாலை,மத்திய பேருந்து நிலையம் பகுதிகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தனிநபர் ஒருவர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இதனை அடுத்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பணியாளர்களுடன் உடுமலை சாலை, கோவை சாலையில் உள்ள நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ள கடைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மத்திய பேருந்து நிலையம் அருகில் வணிக நிறுவனங்களில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகள் மற்றும் முன்புறம் அமைக்கப்பட்டு இருந்த கூரைகளை பொக்லின் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர் அப்போது வியாபாரிகள் நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில் சாலைகளை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடைகள் அமைக்கப்படவில்லை இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை ஆனால் தொடர்ந்து அதிகாரிகள் ஆகிரமிப்பு இருப்பதாக கூறி இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கில் செலவு செய்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை சேதப்படுத்துவதால் வாழ்வாதாரம் பாதிக்கபடுகிறது மேலும் வியாபாரமும் இல்லாமல் மிகவும் நஷ்டம் அடைந்து வருவதாக வேதனை தெரிவித்த வியாபாரிகள் இந்த முயற்சியை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். பின்னர் போலீசார், அதிகாரிகள் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி கால அவகாசம் வழங்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து வியாபாரிகள் கலைந்து சென்றனர்.