கோவை ரயில் நிலைய சந்திப்பில் அமைந்துள்ள செம்மனூர் நகைக்கடை உரிமையாளர் பாபி தொடங்கிய ஹோட்டல், அரை மணி நேரத்தில் ஆறு பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கும் போட்டியை அறிவித்ததால், பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த ஹோட்டலில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த செம்மனூர் நகைக்கடை உரிமையாளர் பாபி, ரயில் பெட்டியை ஹோட்டல் போல் வடிவமைத்து, தனது புதிய வியாபாரத்தை தொடங்கியுள்ளார். இந்நிலையில், கடை விளம்பரத்திற்காக, இன்று பிற்பகல் அரை மணி நேரத்தில் ஆறு பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு, நான்கு பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய், மூன்று பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்தனர்.
இந்த அறிவிப்பு அறிந்த கோவை மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்க வந்தனர். இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ரயில் நிலைய சந்திப்பு சாலையில் நிறுத்தியதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, அங்கிருந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.
போட்டியில் பங்கேற்ற சிலர், “பரிசுக்கு அறிவித்த பிரியாணி அளவு வழக்கமாக ஹோட்டலில் வழங்கும் பிரியாணி அளவிற்கு மூன்று மடங்கு அதிகமாக இருந்ததால் சாப்பிட முடியவில்லை” என்றும், “சிக்கன் பிரியாணியை பாத்திரத்தில் அமிக்கி கொடுத்ததால் சாப்பிடுவதற்கு சிரமமாக இருந்தது” என்றும் குற்றம் சாட்டினர்.
போட்டியில் பங்கேற்ற ஒரு இளைஞர், தனது குடும்பத்தின் ஏழ்மையை போக்குவதற்காக ஆறு பிரியாணி சாப்பிட்டு ஒரு லட்சம் பணத்தை வெல்ல வேண்டும் என வந்திருந்தார். ஆனால், அவரால் சாப்பிட முடியாமல் வருத்தத்துடன் வெளியேறினார்.
குறைந்த செலவில் இப்படி இலவசம் மற்றும் பரிசு கொண்ட போட்டி நடத்துவதன் மூலம், பொதுமக்களிடையே புதிதாக திறக்கப்பட்ட இந்த ஹோட்டல் எளிதாக சென்றடையும் என்பது ஹோட்டல் நிர்வாகத்தின் வியாபார யுக்தி என்று தெரிகிறது.
Leave a Reply