புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் முத்தியால்பேட்டை பகுதியில் 9 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகிய இருவரையும், இன்று நீதிமன்றத்தில் போலீசார் முதல் முறையாக ஆஜர் செய்தனர். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை ஏற்கனவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைக்காக, கருணாஸ் மற்றும் விவேகானந்தன் இருவரையும் இன்று புதுச்சேரி போக்சோ (POCSO) சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இவ்வழக்கில் தொடர்புடையவர்களுக்கு ஆதரவாக புதுச்சேரி வழக்குரைஞர்கள் செயல்பட்டதால், குற்றவாளிகளை நேரில் விசாரணைக்கு ஆஜர் செய்ய தாமதம் ஏற்பட்டது.
அதிகாரிகள், அரசின் சார்பில் கொலையாளிகளுக்கு வழக்கறிஞர் நியமித்ததை அடுத்து, குற்றம்சாட்டப்பட்ட இருவரும் இன்று முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். விசாரணைக்கு பிறகு, போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, இருவரையும் அடுத்த மாதம் 19ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டார். இதனையடுத்து, கருணாஸ் மற்றும் விவேகானந்தன் இருவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.