பொள்ளாச்சியில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமையன்று நடைபெறும் குறை தீர்ப்பு முகாமில், போடிபாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள், ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர்.
பொள்ளாச்சி அருகிலுள்ள போடிபாளையம் ஊராட்சியில், 19.6.2016 அன்று, அரசின் சார்பில் ஏழை மற்றும் கூலி வேலைக்குச் செல்லும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக 28 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அந்த பயனாளிகள், அளவீடு செய்யப்படாத நிலையில், வருவாய் துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்து வந்தனர்.
இதையடுத்து, ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, 28 பயனாளிகளில் 12 பேரை தகுதியற்றவர்கள் எனக் கூறி, பட்டாவை ரத்து செய்ய உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம், இலவச வீட்டு மனை பட்டா தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டது.
இந்தநிலையில், ஜனநாயக உரிமைகளுக்கான கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், 2016ல் வழங்கிய வீட்டு மனை பட்டா இடங்களை அளவீடு செய்யாத வருவாய் துறையினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி, பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர்.
Leave a Reply