மும்பையில் கடுமையான புழுதிப் புயல் வீசி வருகின்றது. புழுதிப் புயலுடன் கூடிய மழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை, தாணே மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பலமாக சூறைக்காற்றும் வீசியது.40 – 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமென வானிலை மையம் எச்சரித்திருந்த நிலையில், பலமாக வீசிய சூறைக்காற்றில் செட்டாநகர் சந்திப்பில் கட்கோபார் பகுதியில் ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தப்பட்டிருந்த சுமார் 100 அடி உயர விளம்பரப் பதாகை ஒன்று சரிந்து விழுந்ததில் பெட்ரோல் பங்கில் நின்றிருந்த பலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினா் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இதில் 3 போ் உடல் நசுங்கி உயிரிழந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களில் மேலும் 11 பேர் உயிரிழந்ததாகவும் 50-க்கும் மேற்பட்டோா் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.