சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு ஜூலை 26ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்து அவரது தாய் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதுசம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இடைக்கால ஜாமீன் வழங்கியதுடன், உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில், சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து அவரது தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விரைவாக விசாரிக்கக்கோரி அவரது வழக்கறிஞர் முறையீடு செய்தார்.
முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இந்நிலையில், வழக்கு இன்று பட்டியலிடப்படாத நிலையில் சவுக்கு சங்கர் சார்பில் மீண்டும் முறையிடப்பட்டது.
இதனையடுத்து, வரும் வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.