கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தென் குமாரபாளையம், சிஞ்சுவாடி, மற்றும் நம்பியமுத்தூர் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் சென்ற பொதுமக்களை மர்ம நபர்கள் பட்டாக்கத்தி மூலம் மிரட்டி, அவர்களிடம் இருந்த செல்போன்கள் மற்றும் பணத்தை பறித்து வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தென்குமாரபாளையத்தைச் சேர்ந்த திருமலைசாமி, சிஞ்சுவாடியை சேர்ந்த மணிகண்டன், மற்றும் நம்பியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த மனோகரன் ஆகிய மூவரும் கோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவம் நடந்த பகுதிகளில் தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்தனர். இதன் தொடர்ச்சியாக, சந்தேகத்துக்கிடமாக சாலையில் சுற்றித்திரிந்த சபரி ராஜன் (22), நல்லுகுமார் (21), சுபாஷ் (21), மற்றும் 14 வயது சிறுவன் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் ராமநாடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், கொலை முயற்சி, வாகன திருட்டு, செயின் பறிப்பு, பணம் பறிப்பு, அடிதடி, மற்றும் கஞ்சா விற்பனை போன்ற பல்வேறு குற்றவாளிகளில் ஈடுபட்டுள்ளதையும் தெரியவந்தது.
பட்டா கத்தி மூலம் வழிப்பறி செய்ததை இந்த நான்கு பேரும் ஒப்புக்கொண்டுள்ளனர். சிறுவன் உட்பட அனைவரையும் கைது செய்து, மீதமுள்ள வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
வழிப்பறி சம்பவம் தொடர்பாக புகார் கொடுத்த இரண்டு மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்பிரிவு காவலர்களை, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.