தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் நீர்வரத்து சீராக உள்ளது. இதன் காரணமாக, வார விடுமுறை தினங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் இங்கு பெருமளவில் வருகை தருகின்றனர்.
குற்றாலத்தின் முக்கியமான அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் மற்றும் புலியருவி ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் நீராடி மகிழ்கின்றனர். குறிப்பாக, மெயின் அருவியில் நூற்றுக்கணக்கான பயணிகள் நீராடி மகிழ்ச்சி அடைவது காணப்படுகிறது.
அருவி பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாதுகாப்பு கம்பிகள் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், தற்காலிக தடுப்புகள் அமைக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளதால், நகரில் உள்ள கடைகள், உணவகங்கள் மற்றும் தங்குமிடங்களிலும் பரபரப்பு நிலவுகிறது. சுற்றுலா பயணிகள் நெரிசலை கருத்தில் கொண்டு, அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளனர்.