புதுச்சேரி:ஆன்லைன் மோசடியில் மும்பை போலீசாராக நடித்து, சென்னையை சேர்ந்த மருத்துவர் அழகம்மையிடம் ரூ.27 லட்சம் பறித்த வடமாநில கும்பலை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
முருங்கப்பாக்கத்தை சேர்ந்த டாக்டர் அழகம்மை, சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். கடந்த ஜூன் மாதம், அவரிடம் மும்பை போலீஸ் அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்தி, மோசடி கும்பல் அழைத்தது. “உங்கள் பெயரில் போதைப் பொருள் கடத்தல் நடந்துள்ளது” என்று மிரட்டி, அவரிடம் இருந்து ரூ.27 லட்சம் மோசடி செய்தனர்.
தகவல் சைபர் கிரைம் போலீசாருக்கு
அவரின் புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். டாக்டர் அழகம்மையின் வங்கி கணக்கில் இருந்து பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட கணக்குகளை ஆய்வு செய்த போது, அதில் நாட்டின் பல மாநிலங்களில் இருந்து ரூ.66 கோடியே 11 லட்சம் பரிமாற்றம் நடந்தது தெரியவந்தது.
தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்த சைபர் கிரைம் போலீசார், மேற்கு வங்காளத்தை சேர்ந்த சஞ்ஜிப் தீப் (54), ராகேஷ் கோஷ் (39), மற்றும் அமித் சர்தார் (36) ஆகியோரை கைது செய்தனர். மூவரும் பயன்படுத்திய வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
முதற்கட்ட விசாரணையில் கைதான மூவரின் தொடர்புகளின் மூலம் மேலும் மூன்று தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி மற்றும் தியாகராஜனின் சிறப்பான செயல்பாட்டை, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா பாராட்டினார்.