கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 33-ஆக அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோமுகி ஆற்றங்கரை பகுதியில் செவ்வாய்க்கிழமை விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்தவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி விழுந்தனர்.தொடர்ந்து, புதன்கிழமை காலையும் பலர் கள்ளச்சாராயம் அருந்திவிட்டு மயங்கிய நிலையில், அவர்களுக்கு பார்வை மங்கியதுடன், நெஞ்சு எரிச்சல், வயிற்று வலி ஏற்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதேபோல, கள்ளக்குறிச்சியை அடுத்த மாதவச்சேரி பகுதியிலும் கள்ளச்சாராயம் அருந்திய பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.கருணாபுரம், ஏமப்பேர், வீரசோழபுரம், சிறுவங்கூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை உயிரிழந்திருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளது.கள்ளச்சாரயம் விற்ற வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, சேலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 70-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.சிகிச்சைப் பெற்று வருபவர்களில் பலரும் ஆபத்தான நிலையில் இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.