
தென்காசி மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் குற்றாலம், 1997 முதல் சிறப்பு நிலை பேரூராட்சியாக செயல்பட்டு வருகிறது. தற்போது, தமிழக அரசு பேரூராட்சிகளை நகராட்சி நிர்வாகத்துடன் இணைக்க முனைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஒரு பகுதியாக குற்றாலத்தை தென்காசி நகராட்சியுடன் இணைக்கும் முயற்சி நடைபெறுவதால், குற்றாலத்தின் தனித்துவம் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், குற்றாலம் பேரூராட்சி அலுவலகத்தில் மன்ற தலைவர் கணேஷ் தாமோதரன் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், குற்றாலத்தை நகராட்சியில் இணைப்பதன் மூலம் அதன் தனித்துவம் இழக்க நேரிடும் என கவுன்சிலர்கள் கவலை வெளியிட்டனர். மேலும், இதனால் குற்றாலம் வார்டாக மாற்றப்படுவதுடன், நிதி வருவாய் பகிர்வில் சிக்கல்கள் உருவாகி, வளர்ச்சிப் பணிகள் முடங்கும் அபாயம் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை தரும் சீசன் காலங்களில், பொதுசுகாதாரப் பணிகளை மேற்கொள்வது சிரமமாகும் என்றும் கவுன்சிலர்கள் குறிப்பிட்டனர். இதனால், குற்றாலம் பேரூராட்சியை நகராட்சியில் இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என மன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கணேஷ் தாமோதரன், மன்றத் தலைவர், இந்த முயற்சி குற்றாலத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்பதால், அரசு அதை கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
