
புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை எதிர்த்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், இரு சக்கர வாகனங்களை கயிறு கட்டி இழுத்து, அரசின் நடவடிக்கைகளை கண்டித்தனர்.
புதுச்சேரி அரசு கடந்த டிசம்பரில் பேருந்து டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியதோடு, ஜனவரி 1 முதல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2, டீசலுக்கு ரூ.1.99 உயர்வு அமல்படுத்தியது. இதனால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், ஃபெஞ்சல் புயலால் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும், மேலும் தலைக்கவசம் நடைமுறைக்கு முன் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
போராட்டம் 45 அடி சாலை சந்திப்பில் தொடங்கி காமராஜர் சிலை வரை நடைபெற்றது. இதில் சங்கத்தினர், மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.