தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் துத்திகுளம் செல்லும் சாலையில் வசிக்கும் ஆனந்த் என்பவரின் வீட்டில் துணி துவைக்க பயன்படுத்தப்படும் வாஷிங் மெஷினில் பாம்பு ஒன்று பதுங்கியிருந்தது.
ஆனந்தின் மனைவி, வாஷிங் மெஷினை திறந்தபோது உள்ளே பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக ஆலங்குளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
நிலைய அலுவலர் விஸ்வநாதன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள், பாம்பை மீட்க பல்வேறு முயற்சிகள் செய்தனர். ஆரம்பத்தில், பாம்பு மெஷினுக்குள் இருந்து வெளியே வராமல் ஒளிந்துகொண்டது. அதனை வெளியேற்ற, வீரர்கள் வாஷிங் மெஷினை தனித்தனியாக கழட்டினர். அதுவும் பலனளிக்காததால், மெஷினுக்குள் வெந்நீர் ஊற்றினர்.
சூடு தாங்க முடியாமல் பாம்பு வெளியே வந்ததும், வீரர்கள் அதனை பாதுகாப்பாக பிடித்தனர். விசாரணையில், இது சாரை பாம்பு இனத்தைச் சேர்ந்தது என தெரியவந்தது. பின்பு, அந்த பாம்பு ஆலங்குளம் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.