
புதுச்சேரி மாநிலத்தில் வருவாய் பற்றாக்குறையை சீர்செய்ய பல்வேறு வாய்ப்புகள் இருந்தும், அவற்றை பயன்படுத்தாமல் பெட்ரோல், டீசல் வரிகளை உயர்த்தியுள்ள அரசின் முடிவு தேவையற்றது என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இந்த வரி உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்வதால் மாநிலத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என அவர் கண்டனம் தெரிவித்தார்.
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சொத்துவரி விதிக்காமல் அரசு செயல்படுவதை அவர் கடுமையாக விமர்சித்தார். கடந்த 10 ஆண்டுகளாகவே இதுபோன்ற சலுகைகள் வழங்கப்பட்டதாகவும், இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், மதுபான கொள்கையில் சிறிய மாற்றங்கள் கொண்டு வருவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.750 கோடி வருவாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார். ENA (எக்ஸ்ட்ரா நியூட்ரல் ஆல்கஹால்) இறக்குமதியில் வரி விதிப்பதன் மூலம் கூடுதலாக ரூ.40 கோடி வருவாய் கிடைக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நில மதிப்பை மேம்படுத்தியும், தனியார் பேருந்துகளின் சாலை வரி மற்றும் காலாண்டு வரிகளை உயர்த்தியும் அரசுக்கு வருவாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற பல வழிகள் இருந்தும், அவற்றை நடைமுறைப்படுத்தாமல் சாமானிய மக்களுக்கு பொருளாதார சுமை ஏற்படுத்தும் வகையில் அரசு செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
இந்த கோரிக்கைகளை முதல்வரிடம் எழுப்ப அதிமுக சார்பில் விளக்கக் கடிதம் அளிக்கப்படும். பதில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், துணைநிலை ஆளுநரை சந்தித்து மனு அளிக்கப்படும் என அன்பழகன் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த செய்தியாளர்களை சந்திப்பில் மாநில கழகப் பொருளாளர் ரவிபாண்டுரங்கன், துணைச் செயலாளர் நாகமணி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.