
கோவையில் 25வது சந்தர் நினைவு கார் பந்தயம் வெள்ளி விழா ஆண்டையொட்டி இரண்டு நாள் போட்டியாக நடைபெறுகிறது. இதுகுறித்து சந்தர் நினைவு அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் வி.கே. ராஜகோபால் தெரிவித்ததாவது:
இந்த கார் பந்தயம் ஜனவரி 11ஆம் தேதி காலை 8.30 மணிக்கு கோவை காஸ்மோபாலிடன் கிளப்பில் இருந்து தொடங்குகிறது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைக்கிறார். பந்தய தூரம் 340 கிலோமீட்டராக இருக்கும் இந்த நிகழ்வில் 50 கார்கள் பங்கேற்கின்றன.
போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், இரண்டாவது பரிசாக ரூ.50,000 மற்றும் மூன்றாவது பரிசாக ரூ.25,000 வழங்கப்படும்.
பரிசளிப்பு விழா ஜனவரி 12ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு காஸ்மோபாலிடன் கிளப்பில் நடைபெறுகிறது. விழாவில் முன்னாள் டிஜிபி ஏ.கே. விஸ்வநாதன் மற்றும் எப்1 கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் மற்றும் பண பரிசுகளை வழங்குகிறார்கள்.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை பிரிதிவிராஜ் சந்திரசேகர், விஜயகுமார் மற்றும் பாலமுருகன் ராமசாமி ஒருங்கிணைத்து வருகின்றனர்.