
தென்காசி மாவட்டம் குற்றாலத்தைச் சேர்ந்த 13 வயது மாணவி வர்ஷா, உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டு அனைவரின் பாராட்டைப் பெற்றார். ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் வர்ஷா, சிறு வயதிலிருந்தே ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு, பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த சாதனை முயற்சியை மேற்கொண்டார்.

குத்துக்கல்வலசை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒரு டன் எடை கொண்ட காரை கயிற்றை பல்லால் கடித்து இழுத்தபடி 150 மீட்டர் வரை ஸ்கேட்டிங் செய்து சாதனை முயற்சியில் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியை சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தொடங்கி வைத்து, வர்ஷாவுக்கு கோப்பை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வர்ஷாவுக்கு உற்சாகம் அளித்து பாராட்டினர். வர்ஷாவின் இந்த முயற்சி, சமூகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஒரு முக்கியமான முயற்சியாக அமைந்தது.
