வயநாடு மக்களவைத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். அவர் 6,22,000 வாக்குகளை பெற்று, 4,10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் நிகழ்வுகள் தொடங்கியதும், பிரியங்கா காந்தி மற்றும் நாண்டெட் தொகுதியில் வென்ற காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர வசந்த் ராவ் சவான் ஆகியோர் எம்.பி. பதவியேற்றனர். அரசமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தியபடி பிரியங்கா காந்தி வயநாடு மக்களவைத் தொகுதியின் எம்.பி.யாக பதவியேற்றார்.
இந்திரா காந்தி மற்றும் சோனியா காந்திக்கு பிறகு நேரு குடும்பத்தில் இருந்து எம்.பி.யாக பதவியேறும் மூன்றாவது பெண் பிரியங்கா காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்திற்கு கேரளாவின் பாரம்பரிய புடவை அணிந்து வந்த பிரியங்கா காந்தியை, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாசலில் இருந்து அழைத்துக்கொண்டு வந்தார். அவரின் குடும்பத்தினர் மற்றும் பார்வையாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று உற்சாகமாகக் கண்டனர்.
முதன்முறையாக மக்களவையில் நுழைந்துள்ள பிரியங்கா காந்தி, வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கான உதவித்தொகை வழங்கப்பட தாமதமாக இருப்பது குறித்து கேள்வி எழுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.