மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்த பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு இன்று (28-ஆம் தேதி) முதல் டிசம்பர் 1-ஆம் தேதி வரை மலை ஏறும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக கனமழை பெய்து வருவதால், பக்தர்களின் அனுமதி குறித்த தெளிவற்ற நிலை ஏற்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை எச்சரிக்கை இல்லை எனவும், வானிலை நிலவரத்தை பொறுத்து தினசரி பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் தெரிவித்தார்.
இதையடுத்து, இன்று காலை 7 மணி முதல் மலையேறும் அனுமதி வழங்கப்பட்டது. குறைந்த அளவில் பக்தர்கள் மட்டுமே மலை ஏறிய நிலையில், தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
பிரதோஷ தினமான இன்று மாலை சுந்தர சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகின்றன. கோவில் பரம்பரை அறங்காவலர் பெரியசாமி ராஜா மற்றும் செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
மழை காரணமாக அனுமதியில் ஏற்பட்ட காலதாமதம் மற்றும் மழை எச்சரிக்கை காரணமாக, இன்று பக்தர்கள் குறைந்த அளவிலேயே வந்துள்ளனர்.