சென்னையில் வரும் டிசம்பர் 6-ந்தேதி அம்பேத்கர் பற்றிய புதிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில், விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்க உள்ளார். இதே விழாவிற்கு தவெக தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இருவரும் ஒரே மேடையில் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், திருமாவளவன் விழா குறித்து தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது: “விஜய் விழாவில் பங்கேற்பார் என சொல்லப்பட்டது. ஆனால் இது தவெக மாநாட்டுடன் தொடர்புடையதாக இல்லை. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புத்தகத்தை வெளியிடுவார், நான் அதை பெற்று கொள்வேன் என்பதே திட்டம். இது சுயமாக அமைக்கப்பட்ட விழா; அரசியல் நோக்கங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டதாக கருதுவது சரியல்ல.”
மேலும் “நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதாலே கூட்டணி மாறிவிடும் என்பது எந்தவித உளவியல்? நாங்கள் வேறு கூட்டணிக்குப் போவதற்கான எந்த தேவையும் இல்லை.”
தவெக தலைவர் விஜயுடன் ஒரே மேடையில் திருமாவளவன் பங்கேற்க உள்ள நிலையில், இந்த சந்திப்பின் பின்னணியில் அணி மாற்றம் நிகழுமா என்பது குறித்து பலரிடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது.