மத்திய அரசின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பணியாளர்களின் ஓய்வு கால நலனுக்காக சிறந்த திட்டங்களை வழங்குகிறது. தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை EPF ஆக பிடிக்கப்படும், அதே அளவு நிறுவனமும் வழங்க வேண்டும். இதற்கான தொகைக்கு மத்திய அரசு வரையறுக்கப்பட்ட வட்டியை வழங்குகிறது.
தற்போது EPFO பயனாளர்கள் அவசர தேவைகளுக்காக இணையதளத்தின் மூலம் பணத்தை எளிதில் பெறலாம். இந்த நடைமுறை மேலும் விரைவில் மேம்படுத்தப்படும். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்ததாவது, அடுத்த ஆண்டில் EPFO சேவைகள் ஏடிஎம் மூலம் பணத்தை எடுக்கும் வசதியுடன் இணைந்தவுடன், பயனாளிகள் மனுநீட்சி இல்லாமல் நேரடியாக பணத்தை பெற முடியும்.
அமைச்சக செயலாளர் சுமிதா தவ்ரா கூறுகையில், “EPFO சேவைகளுக்காக தனித்தனியாக கார்டுகள் வழங்கப்படும். இது வங்கியின் ஏடிஎம் கார்டு போன்று செயல்படும். இந்தக் கார்டுகள் மூலம் பயனாளர்கள் மொத்த தொகையின் 50 சதவீதம் வரை பணத்தை எடுக்க முடியும். ஆனால் பணத்தை எடுக்கும் நிலைமைகள் முந்தைய நடைமுறைகளின் அடிப்படையிலேயே இருக்கும். வேலையில் இருக்கும் போது பணத்தை எடுக்க முடியாது. வேலையில் இருந்து ஓய்வுபெற்ற பின், ஒரு மாதத்திற்குள் 75 சதவீதம் பணத்தை பெறலாம். மீதமுள்ள தொகையை இரண்டு மாதங்கள் கழித்து எடுக்கலாம்,” என்றார்.
EPFO இன் தகவல் தொழில்நுட்ப அமைப்பு அடுத்த ஆண்டு IT 2.1 மேம்படுத்தல் மூலம் வங்கி சேவைகளைப் போல செயல்படக்கூடியதாக மாறும். இதனால் பயனாளர்கள் எந்த சிக்கலும் இல்லாமல் பணத்தை எளிதாகப் பெற முடியும்.
இந்த புதிய சேவையின் மூலம் தொழிலாளர்கள் தங்களின் அவசர கால தேவைகளுக்கு EPF பணத்தை மேலும் நெருக்கமாகக் கிடைக்கச் செய்ய EPFO உறுதியாக செயல்படுகிறது.