ஆதார் ஆணையம், நாடு முழுவதும் ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிப்பதற்கான அவகாசத்தை செப்டம்பர் 14-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. ஆதார் அட்டை, இந்தியாவில் முக்கியமான அடையாள அட்டையாக கருதப்படுகிறது, மேலும் பல்வேறு அரசின் நலத்திட்ட சேவைகளுக்கான அடையாளமாகவும் பயன்படுகிறது. தற்போதைய கணக்குப்படி, இந்தியாவில் 140 கோடியே 21 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர்.
ஆதார் அட்டை மூலம் பல துறைகளில் அவசியமான சேவைகள் கிடைக்கின்றன. ஆதார் தொடர்பான மோசடிகளை தடுக்கவும், தகவல்களை புதுப்பித்துக்கொள்வதற்கும், 2016ம் ஆண்டு ஆதார் ஆணையம் சில விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. இதன் அடிப்படையில், ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஆதார் அட்டையை சமீபத்திய தகவல்களுடன் புதுப்பிக்க வேண்டும்.
புதுப்பிப்பதற்கான செயல்முறைகளில், ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, புகைப்படம் போன்ற விவரங்களை மாற்றுவதற்கு வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, அல்லது வங்கிக்கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களுடன் அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தை அணுகலாம். மேலும், https://myaadhaar.uidai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாகவும் புதுப்பிக்க முடியும்.
ஆதார் அட்டை தொடர்பாக இதுவரை புதுப்பிக்காதவர்கள் செப்டம்பர் 14-ம் தேதிக்குள் கட்டணமின்றி புதுப்பித்துக் கொள்ள முடியும். இந்த தேதிக்கு பிறகு, புதுப்பிப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
Leave a Reply