தீபாவளி மற்றும் சத் பூஜை பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் 5,975 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.
தீபாவளி அக்டோபர் 31ஆம் தேதியும், சத் பூஜை நவம்பர் முதல் வாரத்திலும் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, பெரும்பாலான மக்கள் நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடுகின்றனர். இதை மனதில் கொண்டு ரயில்வே துறையின் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புதுதில்லியில் செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ், “பண்டிகை காலத்தில் பயணத்துக்கு உதவுவதற்காக 108 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 12,500 கூடுதல் பெட்டிகள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன,” என்றார்.
“2024-2025 நிதியாண்டில் இதுவரை 5,975 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், பண்டிகை காலத்தில் சுமார் ஒரு கோடி பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய முடியும். கடந்த 2023-2024 ஆண்டில் தீபாவளி மற்றும் சத் பூஜைக்காக 4,429 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன,” என்றும் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்தார்.
இந்த சிறப்பு ரயில் சேவைகள் மூலம், பண்டிகை காலத்தில் மக்கள் கூடுதல் சிரமம் இல்லாமல் வசதியான முறையில் பயணம் செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டார்.
Leave a Reply