திருச்சி:கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான 53வது தேசிய மகளிர் ஹாக்கி போட்டியில் தங்கம் வென்று திருச்சி அணி திரும்பியதற்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 2-ந்தேதி தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெற்றன. நாடு முழுவதும் உள்ள 80 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் இதில் பங்கேற்றன.
திருச்சி கேந்திரிய வித்யாலயா அணி சிறப்பாக விளையாடி, இறுதிப் போட்டியில் ஜெய்ப்பூர் அணியை 4-2 என்ற கோல்கணக்கில் தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றது.
வீராங்கனைகள் திருச்சிக்கு திரும்பியபோது, ஜங்ஷன் ரயில்நிலையத்தில் பள்ளி நிர்வாகமும் பெற்றோர்களும் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முந்தைய 51வது தேசிய ஹாக்கி போட்டியில் வெண்கலமும், 52வது தேசிய போட்டியில் வெள்ளி பதக்கமும் வென்றிருந்த திருச்சி அணி, இம்முறை கடின உழைப்பின் பலனாக தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த மாணவிகளுக்கு அரசு உதவிகள் கிடைத்தால், அவர்கள் பிற்காலத்தில் சிறந்த ஹாக்கி வீராங்கனைகளாக மலர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள் என ஹாக்கி பயிற்சியாளர் கோபி தெரிவித்தார்.