பொள்ளாச்சி ரயில் நிலையம்: சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த பின், ரிசர்வேசன் கவுன்டர் மீண்டும் திறக்கப்படும் – ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்
பொள்ளாச்சி: பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் பொள்ளாச்சி வழியாக ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால், இப்பகுதியில் அதிக அளவில் பொதுமக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனை முன்னிட்டு, பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளை நேரில் பார்வையிட நேற்று பாலக்காடு கோட்ட மேலாளர் வருகை புரிந்தார். அவரை சந்தித்து, பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன், முன்னாள் ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் ஜோதிமணி மற்றும் நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
குறிப்பாக, ரயில் நிலையத்தில் முன்பு இயங்கிய தனி முன்பதிவு மையத்தை மீண்டும் திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்காக, சீரமைப்பு பணிகள் முடிந்த பின்பு அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக கோட்ட மேலாளர் உறுதியளித்தார். இதுவரை, பயணிகளுக்காக முன்பதிவில்லா டிக்கெட் வழங்கும் இரண்டு இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன, மேலும் முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா டிக்கெட்கள் ரயில் நிலைய கவுன்டரில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தால் மட்டுமே தனி முன்பதிவு மையத்தை மீண்டும் தொடங்க வாய்ப்பு இருப்பதாக ரயில்வே நிர்வாகிகள் தெரிவித்தனர்.