ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் சிப்காட்டில் அமைந்துள்ள சாம்சங் நிறுவன தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், கடந்த செப்டம்பர் மாதம் தொழிற்சங்க உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அரசு தலையீடுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு போராட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, ஊழியர்கள் மீண்டும் பணியில் இணைந்தனர்.
இந்நிலையில், தொழிற்சாலை நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகளை கண்டித்தும், தொழிலாளர்களுக்கு மரியாதை மற்றும் நீதியை வலியுறுத்தியும், சாம்சங் தொழிலாளர்கள் நாளை மறுநாள் (19-ந்தேதி) ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர்.
போராட்டத்தில் பங்கேற்று பணிக்கு திரும்பிய தொழிலாளர்களுக்கு முந்தைய பணி வழங்கப்படவில்லை என்றும், 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தால் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிர்வாகத்தின் மனஅழுத்தத்தால் ஒரு ஊழியர் தற்கொலைக்கு முயன்றது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக, சி.ஐ.டி.யூ. அமைப்பு தொழிற்சாலையின் உள்ளேயே அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. வருகிற 19-ந்தேதி உண்ணாவிரதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.