சென்னை: தமிழ்நாடு அரசின் முக்கிய திட்டமான கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2024-25 ஆம் ஆண்டில் 1 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ.400 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளார். ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.3,50,000 நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏறத்தாழ 8 இலட்சம் குடிசை வீடுகள் உள்ளனவாக “அனைவருக்கும் வீடு” என்ற கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு, 2030ஆம் ஆண்டிற்குள் அனைத்து குடிசை வீடுகளையும் மாற்றி, 8 லட்சம் புதிய வீடுகள் கட்டிட திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.
தற்போது நடப்பாண்டில், ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் 360 சதுர அடி பரப்பளவில் இருக்கும். பயனாளர்களின் நிதிச்சுமையை குறைக்கும் நோக்கில், சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகள் குறைந்த விலையில் துறை மூலம் வழங்கப்படுகின்றன.
வீட்டின் கட்டுமானத்துக்கான தொகை நான்கு தவணைகளில் பயனாளர்களின் வங்கிகணக்கிற்கு நேரடியாக மாற்றப்படும். இதுவரை ரூ.1051.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.860.31 கோடி பயனாளர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், துறை மூலம் வழங்கப்படும் சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகளுக்காக ரூ.135.30 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் வீடுகளின் கட்டுமானம் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, கட்டுமான பணிகளை மேலும் துரிதப்படுத்த ரூ.400 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.1451.34 கோடியாக உயர்ந்துள்ளது.
கலைஞரின் கனவு இல்லம் திட்டம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அனைத்து வீடுகளும் 2024-25 நிதியாண்டிற்குள் முடிக்கப்படும் வகையில், தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.