காஞ்சிபுரம் மாநகராட்சியில் காலண்டர் தெருவைச் சேர்ந்த கஸ்தூரி (62), 2020-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர். இவர் தனியாக வசித்து வந்த நிலையில், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருந்தார். கடந்த 22-ஆம் தேதி கஸ்தூரியின் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் கஸ்தூரியின் வீட்டினுள் சென்று பார்த்தபோது, அவர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். உடல் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, கஸ்தூரி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த கொலை வழக்கில், கஸ்தூரியின் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பான உறவுகள் மற்றும் வியாபார ஒப்பந்தங்களில் அவருக்கு உதவிய காஞ்சிபுரம் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வளையாபதி (65) தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, காஞ்சிபுரம் அருகே கருக்குப்பேட்டை பகுதியில் வளையாபதியை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில், வளையாபதி, தனது நண்பர் பிரபு (52) உடன் சேர்ந்து கஸ்தூரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். உடனடியாக வளையாபதி கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பிரபுவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Leave a Reply