சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டனியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் மணிமேகலை, மாநில பொது செயலாளர் மயில் மற்றும் மாநில பொருளாளர் கணேசன் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற நிலையில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்கு பின், மயில் மாநில பொது செயலாளர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
மயில் கூறியதாவது: “தமிழக சட்டமன்றத்தில் நிதியமைச்சர், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதளின்படி ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த குழு அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். இது அரசின் ஏமாற்று வேலை ஆகும், இது கண்டனத்துக்குரியது. 4 ஆண்டுகளாக எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக இந்த அறிவிப்பு வந்துள்ளது. அரசு அதை திரும்ப பெற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.”
அத்துடன், மயில் மேலும் கூறியதாவது: “இடைநிலை ஆசிரியர்களுக்கு இரண்டு ஊதிய குழுக்களில் எதிர்கொள்ளும் அநீதியை நீக்க வேண்டும். பழைய முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பெண்ணாசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்புகளை பறிக்கும் அரசானை 243 ஐ ரத்து செய்ய வேண்டும். அரசின் தேர்தல் அறிக்கையில் கூறிய ஈட்டிய விடுப்பு, ஒப்படைப்பு மற்றும் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவை மீண்டும் வழங்கப்பட வேண்டும்.”
மயில், இதனை தொடர்ந்து, 15 அம்ச கோரிக்கைகள் குறித்து பல்வேறு தொடர்ந்த போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும், பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி சென்னையில் தோழமை சங்கங்களுடன் இணைந்து உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாகவும் தெரிவித்தார். இந்த சந்திப்பில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.