சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கலங்கரை விளக்கத்தில் (லைட் ஹவுஸ்) புதிய ரேடார் கருவி மாற்றப்பட்டுள்ளது.
1976 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மெரினா லைட் ஹவுஸ், சுமார் 150 அடி உயரம் கொண்டது. இந்த லைட் ஹவுஸ், கடலோர பாதுகாப்பு மற்றும் பரந்த கடல் பகுதிகளை கண்காணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த சில நாட்களாக, கலங்கரை விளக்கத்தில் இருந்த 46 மீட்டர் நீள ரேடார் கருவி பழுதாகியிருந்தது. இந்த கருவி, கடலோர பகுதிகளில் வரும் படகுகள், தீவிரவாதிகளின் ஊடுருவல் மற்றும் போதை பொருள் கடத்தல்களை துல்லியமாக கண்காணிக்க பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், பெங்களூருவில் இருந்து புதிய ரேடார் கருவி கொண்டு வரப்பட்டு, மூன்று மணி நேரத்தில் அதை பொருத்தும் பணி நிறைவேற்றப்பட்டது. பழைய ரேடார் கருவி, கடலோர காவல் படையினரின் பராமரிப்பு குழுவினரால் அகற்றப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது.
புதிய ரேடார் அமைப்பின் மூலம், மெரினா கடற்கரை பாதுகாப்பு மேலும் வலுவடையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.