கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது. காலை 8.00 மணிக்கு தொடங்கி மாலை 9.00 மணிவரை நடந்த இந்த முகாமில், பேரூராட்சி மன்ற தலைவர் வெ. விஷ்வ பிரகாஷ் வரவேற்பு நிகழ்வை தொடங்கினார்.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமை வகித்த இந்த முகாமில், பொதுமக்களிடமிருந்து நேரடியாக குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். மாவட்ட கூடுதல் ஆட்சியர், தாட்கோ மேலாளர் கு. மகேஸ்வரி, பேரூராட்சி மன்ற தலைவர் வெ. விஷ்வ பிரகாஷ், மற்றும் பல்வேறு அதிகாரிகள் அரசு மருத்துவமனை, அரசு பள்ளிகள், நீர் தேக்க தொட்டிகள், வளம் மீட்பு பூங்கா, பொதுக் கழிப்பிடங்கள் ஆகியவை ஆய்வு செய்தனர்.
பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார் மற்றும் சுகாதார ஆய்வாளர் பரமசிவம் ஆகியோர் முகாமில் முன்னிலை வகித்தனர். அதிகாரிகள், பொதுமக்கள் வழங்கிய மனுக்களை 7 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தனர்.
மின்சாரத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் கலந்து கொண்டு, துறை வாரியாக மனுக்களை பெற்றுக் கொண்டனர். இதில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். நிகழ்வில் ஸ்வேதா சுமன், சுரேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.