கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள வனக்கல்லூரியில் 27வது மாநில அளவிலான வனத்துறை விளையாட்டுப் போட்டிகள் 2 நாட்கள் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகளை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் 12 மண்டல வனத்துறையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகள் துவங்குவதற்கான விளையாட்டு ஜோதி ஏற்றப்பட்டது. மேலும், இந்த ஆண்டில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள், வென்ற கோப்பைகளை அமைச்சரிடம் காண்பித்து அவரது வாழ்த்துகளைப் பெற்றனர்.
விழாவில் சிறப்புரையாற்றிய வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், விளையாட்டுகள் முக்கியத்துவம் பெறுவதற்கு தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பல்வேறு போட்டிகள், தமிழ்நாட்டின் பெருமையை உயர்த்தியுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், 1992 முதல் அகில இந்திய வனத்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் ஒவ்வொரு மாநிலத்தில் நடைபெறுவதுடன், 28வது அகில இந்திய வனத்துறை போட்டிகளை தமிழகத்தில் நடத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்றார். தமிழகத்தில், ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் உயிர் பன்மையியல் பசுமையாக்கும் திட்டம் செயல்படுத்தி வருவதாகவும், இதன் மூலம் யானை உயிரிழப்புகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
வனத்துறை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுத்தொகை உயர்த்தப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், யானை வழித்தடங்கள் கண்டறிந்து அதற்கான தீர்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது, மனநிலைமாற்றம் மற்றும் மனித-விலங்கு மோதல்களைத் தடுக்க வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், முறையாக அனுமதி இல்லாத ரிசார்ட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Leave a Reply