மது போதை, ஆபாசம், ஒழுக்கக் கேடுகளிலிருந்து மக்களை காப்போம் என்ற தலைப்பில், ஜமாஅத்தே இஸ்லாமிய ஹிந்த் அமைப்பின் மகளிர் அணியின் சார்பில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று திருச்சியில் நடைபெற்றது.
ஒழுக்கமே சுதந்திரம் என்ற தலைப்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் மும்தாஜ் தலைமையில், திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜமாஅத்தே இஸ்லாமிய ஹிந்த் அமைப்பு, ஒழுக்கமே சுதந்திரம் என்ற மையக்கருத்தின் கீழ், செப்டம்பர் 1 முதல் 30 வரை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பரப்புரை நடத்தி வருகிறது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில், மது, சூதாட்டம் உள்ளிட்ட பழக்கவழக்கங்களால் சமூகத்தில் ஏற்படும் சீரழிவுகளை சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மது அருந்துவதால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள், ஆடை அலங்காரத்தால் உருவாகும் சீர்கேடுகள் போன்றவற்றின் தீமைகளை மக்களுக்கு விளக்கும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
திருச்சியில், தலைமை தபால் நிலையம் முதல் மேலப்புதூர் வரை நடைபெற்ற மனித சங்கிலி விழிப்புணர்வில் சிறப்பு விருந்தினர்களாக காவல்துறை ஆய்வாளர் அஜீம் மற்றும் என்.ஆர்.ஐ. ஏ.ஐ. எஸ். அகாடமியின் இயக்குனர் விஜயா லயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த விழிப்புணர்வுப் பேரணியில், ஜமாஅத்தே இஸ்லாமிய ஹிந்த் மகளிர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிவில், மக்கள் தொடர்பு செயலாளர் நவாஸ்கான் நன்றி கூறினார்.