ஆழியார் கவியருவியில் காட்டாறு வெள்ளம் காரணமாக சுற்றுலா பயணிகளுக்குத் தடை.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆழியார் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர் அதிகரித்து பெருக்கெடுத்து ஓடுகிறது. இவ்வாறு, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட ஆழியார் கவியருவியில் காட்டாற்று வெள்ளம் ஆற்றின் மீது வெகுவாக பாய்கிறது. வெள்ளம் காரணமாக தடுப்பு வேலிகளும் அடித்து செல்லப்பட்டுள்ளன.
இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. குளத்திற்கு வரும் நீரின் அளவு சீராகிய பின்னர் மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். முன்னறிவிப்பின்றி வந்த சுற்றுலா பயணிகள், ஆழியார் வனத்துறை சோதனை சாவடி மூலம் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.