அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்களுக்கு அரசு ஊழியராக அறிவிக்கப் பெற்று, கிரேட் 3 மற்றும் கிரேடு 4 அரசு ஊழியர்களாக முறைப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக ஊழியர்களுக்கு ரூ. 26,000 மற்றும் உதவியாளர்களுக்கு ரூ. 21,000 வழங்க வேண்டும். மேலும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூ. 10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ. 5 லட்சம், குறைந்தபட்ச டி.ஏ உடன் கூடிய ஓய்வூதியம் ரூ. 9000 வழங்க வேண்டும் எனவும், 10 ஆண்டுகள் பணி முடித்த பின் மேற்பார்வையாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும் அல்லது மேற்பார்வையாளருக்கான ஊதியம் வழங்க வேண்டும் எனவும், மே மாத விடுமுறை ஒரு மாதம், மகப்பேறு விடுப்பு அரசு பெண் ஊழியர்களுக்குப் போல் ஒரு வருடம் வழங்க வேண்டும் எனவும் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட பொருளாளர் ராணி தலைமையிட்டார். மாவட்ட துணைத் தலைவர் அகிலாண்டேஸ்வரி, வட்டார தலைவர் அர்ச்சனா, வட்டார செயலாளர் கலைவாணி, சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் சீனிவாசன் ஆகியோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், வட்டார துணைத் தலைவர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.