கோவை, லட்சுமி மில்ஸ்:
ரோபோடிக் மற்றும் டிஏவிஐ (TAVI) தொழில்நுட்பத்துடன் இதய நோய் அறுவை சிகிச்சை செய்யப்படும் முறைகள் குறித்து அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் செங்கோட்டுவேலு மற்றும் எம்.எம். யூசுப் விளக்கமளித்தனர். இந்த நிகழ்வு கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இந்த புதிய தொழில்நுட்பங்கள் வயதானவர்களுக்கு ஏற்படும் இதய வால்வ் பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகின்றன. ரோபோடிக் மற்றும் டிஏவிஐ முறைகளின் மூலம் தொடையின் மூலம் ஊசி செலுத்தி, அறுவை சிகிச்சை செய்யாமல் இதய வால்வுகளை சரிசெய்ய முடியும். மேலும், பைபாஸ் அறுவை சிகிச்சை பெற்றவர்களுக்கும் இந்த முறையை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கலாம், மேலும் சிகிச்சைக்குப் பிறகு சில நாட்களிலேயே நோயாளிகள் தங்கள் சாதாரண பணிகளை செய்யத் தொடங்குவார்கள்.
முந்தைய முறைகளில், இதய அறுவை சிகிச்சைக்கு நெஞ்சு எலும்பை திறக்க வேண்டியிருந்தது. ஆனால், இப்போது புதிய தொழில்நுட்பங்களின் மூலம் இதயத்தின் கீழே 5 சென்டி மீட்டர் துளையிட்டு எளிதாக அறுவை சிகிச்சை செய்ய முடியும்.
இந்தியாவில் 40 முதல் 60 வயதிற்குள் உள்ளவர்களுக்கு இதய நோய் பிரச்சனைகள் அதிகமாக இருக்கின்றன, ஆனால் வெளிநாடுகளில் இதே நோய் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே ஏற்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.