“உணர்வுகளைத் தூண்டி ஆதாயம் தேடும் முயற்சி” – CAA அமலுக்கு இந்திய கம்யூ. கண்டனம்

1213752 - “உணர்வுகளைத் தூண்டி ஆதாயம் தேடும் முயற்சி” - CAA அமலுக்கு இந்திய கம்யூ. கண்டனம்

“குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 அறிவிக்கை என்பது உணர்வுகளை தூண்டி ஆதாயம் தேடும் முயற்சி” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “கடந்த 2014 டிசம்பர் 31 ஆம் தேதி வரை பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து, துன்புறுத்தலால் வெளியேறி, இங்கு வந்து வசித்து வரும் இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயினர்கள், பார்சிகள், புத்திஸ்டுகள் மற்றும் கிருஸ்துவர்கள் ஆகியோருக்கு மட்டுமே குடிமக்கள் உரிமை அளிப்பது என்றும். துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்த முஸ்லிம்கள் குடியுரிமை பெற உரிமை இல்லை என்கிறது குடியுரிமை திருத்தச் சட்டம் 2019.

இந்தச் சட்டத் திருத்தம் வேற்றுமையில் ஒற்றுமை பேணும் மரபில் நின்று, வழிவழியாக சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வரும் மக்களை பிளவுபடுத்தும். குறிப்பிட்ட ஒரு சிறுபான்மை இன மக்கள் மீது வெறுப்பும், பகையும் வளர்க்கும் பேரழிவு ஏற்படுத்தும் என்பதால் சட்ட திருத்த நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் ஆர்த்தெழுந்து போராடியதை மறந்து விட முடியாது.

இதையும் படிக்க  கர்ப்பிணி தாய்மார்களுக்கான இலவச சந்திப்பு நிகழ்ச்சி !

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலாக்கத்திற்கு வந்ததாக அறிவிக்கை செய்திருப்பது வேலை வாய்ப்பு, விலைவாசி உயர்வு, வரிச்சுமை, வேலையிழப்பு, கடன் சுமை, சாதிய அடக்குமுறைகள், பெண்கள் மீதான தாக்குதல்கள் போன்ற வாழ்வாதார பிரச்சினைகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பி, மத உணர்ச்சிகளை தூண்டி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியாகும்.

பாஜக மத்திய அரசின் வன்மமும், வெறுப்பும் நிறைந்த, சமூக நல்லிணக்கத்தை, நிலை குலைக்கும் குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிக்கை வெளியிட்டதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், குடியுரிமை திருத்தம் தொடர்பான அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts