திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் நேற்று ஆடிப்பூர தெப்ப உற்சவம் நடைபெற்றது.
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர தெப்பதிருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முதல் நாள் அம்மன் மரக்கேடயத்திலும், 2ம் நாள் கிளிவாகனத்திலும், 3ம் நாள் காமதேனு வாகனத்திலும், 4ம் நாள் சந்திரபிரபை வாகனத்திலும், 5ம் நாள் வெள்ளி ரிஷபவாகனத்திலும், 6ம்நாள் பல்லக்கிலும், 7ம்நாள் பஞ்சமூர்த்தி புறப்பாடும், ரிவபமூஷிகமயூர வாகனத்திலும், 8ம்நாள் சிம்மவாகனத்திலும், விழாவின் 9ம் நாளான 6-ந் தேதி காலை கோரதத்திலும், மாலை வெள்ளிமஞ்சத்திலும், 10ம் நாள் பல்லக்கிலும் எழுந்தருளி 4ம் பிரகாரத்தில் வீதியுலா வந்தார்.தொடர்ந்து அன்று அம்மன் சன்னதியில் ஏற்றி, இறக்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 11ம் நாளான நேற்று முன்தினம் வெள்ளிமஞ்சத்தில் எழுந்தருளுளினார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தெப்ப உற்சவம், 12ம்நாளான நேற்று மாலை 7 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள தெப்பகுளத்தில் நடைபெற்றது. அப்போது சுவாமி, அம்பாள் ஏகசிம்மாசனத்திலும், பஞ்சமூர்த்திகளுடன் தெப்பத்தில் எழுந்தருளி 3 முறை தெப்பக்குளத்தில் வலம் வந்தனர். பின்னர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சுவாமிகள் அங்குள்ள மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்த தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Leave a Reply