புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்கள் 20 கிலோ காகிதங்களைக் கொண்டு 5 அடியில் ரசாயனமின்றி ஒரு வாரத்தில் வித்யா விநாயகர் சிலையை வடிவமைத்து அசத்தியுள்ளனர்.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வருகிற 7 ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாட்டின் அனைத்து நகரம் மற்றும் கிராமங்களிலும் பெரிய அளவில் விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாட உள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளி நுண் கலை ஆசிரியர் கிருஷ்ணன் வழிகாட்டுதல்படி, அப்பள்ளியில் நுண்கலை பிரிவில் பயிலும் மாணவர்கள் பழைய பேப்பர்களை கொண்டு பல்வேறு சிற்பங்களை செய்து வருகிறனர். அந்த வகையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, மாணவர்களுக்கு விநாயகர் சிலைகளை உருவாக்கும் பயிற்சியை ஓவிய ஆசிரியர் கிருஷ்ணன் அளித்தார். இதன் பயனாக 10 மாணவர்கள் இணைந்து பள்ளியில் 20 கிலோ பயனற்ற காகிதங்களை கொண்டு 5 அடி உயரத்தில் ரசாயனம் எதுவும் இன்றி வித்யா விநாயகர் சிலையை ஒருவார காலத்தில் உருவாக்கியுள்ளனர். கல்வியை போதிக்கும் காகிதத்தாலான வித்யா விநாயகர் சிலையின் ஒரு கையில் புத்தகமும், மற்றொரு கையில் பென்சிலும் இடம்பெற்றுள்ளது.
இந்த விநாயகர் தற்போது அந்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் காகிதம் மற்றும் களிமண் கொண்டு உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வழிபாடு செய்ய வேண்டுமென ஆசிரியர் கிருஷ்ணன் மற்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Leave a Reply